சந்துவாழ் மக்களுக்கு என் வணக்கங்கள்,
இப்பதிவை நான் எழுதுவதற்கு முதற்காரணம் என் மனதில் தினமும் சுனாமி அலையாய் ஆர்பரித்துக்கொண்டிருக்கும் பொறாமையின் வெளிப்பாடே!
ஆம், பணமோ, பொருளோ என்னுள் ஏற்படுத்தத் தோற்றுப்போன பொறாமை குணத்தை இவ்வெழுத்துலகம் வென்றுவிட்டது! அவ்வாறெழுந்த பொறாமைக்கு காரணமானவர்களில் முக்கியமான சிலர்,
தோட்டா -
தமிழ்கூறும் நல்லுலகில் ட்விட்டரில் தோட்டாவைத் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை, 140 எழுத்துக்களில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பது தோட்டாவின் கலை, மிக எதார்த்த வார்த்தைகளில் நாம் கூற நினைப்பவற்றை நமக்கு முன் அவர் கூறிவிடுவார், அதில் என்ன சிறப்பென்றால் அவர் அதை நம்மைவிட சிறப்பாய் கூறிவிடுவாரென்பதே. அவர் நம்மை வியக்கவைப்பவற்றில் மற்றுமொரு ஆச்சரியம் என்னவெனில் இவ்வளவு பெரிய பிரபலமாய் இருந்தும் ட்விட்டரில் எந்த ப்ராப்ளத்திலும் அவர் சிக்காமலிருப்பது, பஞ்சாயத்துக்களில் மாட்டாமலிருப்பது, குறிப்பாக எந்தப்பெண்ணும் அவரிடம் பெண்ணியம் பேசி நான் பார்த்ததில்லை. ட்விட்டரில் அனைவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் உண்டென்றால் அவர்தான் தோட்டா ஜெகன்.
நாயோன் -
ட்விட்டரைப் பொருத்தவரை நாயோன் ஒரு பெர்முடா ட்ரையாங்கிள், தோட்டாதான் நாயோனா இல்லை நாயோன்தான் தோட்டாவா என! எனக்கும் குழப்பம்தான்! நாயோனைப் பற்றிக்கூற அவரைப்பற்றி அதிகம் தெரியவேண்டுமென்ற அவசியமில்லை. சொற்றொடர்களை கோர்வையாய், அர்த்தமுள்ளதாய் அமைப்பதில் அவரே அவருக்கு நிகர், அவரிடம் பேசி வெல்வது கிட்டத்தட்ட இயலாக்காரியம் என்னளவில்! பன்முகம் கொண்டவர், என் முயற்சிகள் சிலவற்றில் அவர் என் குருதாதரும் கூட. நான் ட்விட்டரில் அதிகமாக ஆலோசனைகள் கேட்டு கொடுமைபடுத்துவது நாயோனைத்தான். நாயோன் மற்றும் ரைட்டர் இவர்களிடத்திலிருந்தே நான் கற்றுக்கொள்ள தொடங்கியிருக்கிறேன் என்பதால் அவர்களிடத்தில் ஆலோசனைகள் கேட்கும் உரிமையையும் எனக்கு வழங்கியிருக்கிறார்கள் என்றே நம்புகிறேன்:). நான் நாயோனின் கடின விசிறி என்பது சந்தில் ஓரளவுக்கு அனைவரும் அறிந்ததே. என்னளவில் ட்விட்டர் உலகின் மிகச்சிறந்தவர்களில் நாயோனுக்கே என்றும் முதலிடம்.
ரைட்டர் CSK,
உங்களுக்கு தெரியுமா அல்லது ஒப்புக்கொள்வீர்களா என்று தெரியவில்லை, தமிழ் ட்விட்டர் உலகில் பலர் இன்று எழுதக் கற்றுக்கொண்டிருப்பது அவர் ட்வீட்டுகளை வைத்துதான், அவரது எழுத்துநடை நாயோன் மற்றும் தோட்டா போன்று எளிமையானது இல்லை, ஆனால் சற்று வலிமையானதாக இருக்கும், யார் என்ன நினைத்தாலும் கூறவந்ததை கூறிவிடுவார், பின்விளைவுகளைக் கண்டு அவர் பின்வாங்கி நான் கண்டதில்லை, ஆலோசனைகள் வழங்க ஒருபோதும் அவர் தயங்கமாட்டார். அவர் அரட்டைகேர்ளை அதிகமாகப் புகழ்வதாக ட்விட்டரில் ஓர் எண்ணம் நிலவுகிறது, முக்கியமாக புதிதாய் வருபவர்களிடம், நம் ரசனை ஒருவரிடம் ஒத்துப்போகிறதென்றால், அவர் நம்மை வியக்கவைக்கிறாரென்றால், அவரை பாராட்டுவதில் என்ன தவறு? எனக்கு நாயோன் எப்படியோ அதுபோன்று ரைட்டருக்கு அரட்டை! சிலநேரங்களில் அவர் ஆபாசமாக கீச்சுகிறார் என்று குறைகூறுபவர்களிடம் ஒன்றே ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன், நீங்கள் ட்விட்டரில் இரட்டை வேடம் கொண்டுசெய்பவற்றை அவர் ஒரே முகத்தோடு செய்கிறார், உங்களுக்கு முகமூடி தேவைப்படுகிறது, அவருக்கு அது தேவையில்லை, அவ்வளவே!
தொடரும்...
No comments:
Post a Comment