ஏங்க எழுந்திருங்க, ஹப்பி தயவுசெய்து எந்திரி எனக்கு நேரமாச்சு, கிளம்பனும்.
இன்னைக்கு சனிக்கிழமைதான, ஆபீஸ் லீவ் தான? அப்றம் எதுக்கு இம்சை பண்ற?
இல்ல, இன்னைக்கு ப்ராஜக்ட் டிப்ளாய்மென்ட் இருக்கு, so நா போயே ஆகனும்.
ஓகே, அதுக்கு நா இப்போ என்ன பண்ண?
என்னை மெயின்ரோட்ல ட்ராப் பண்ணுங்க, நம்ம தெருக்குள்ள cab வந்துபோக கஸ்டமா இருக்கும்னு மெயின் ரோட்லயே பிக்கப் பண்ணிக்க சொல்லிட்டேன்.
சரி ஒரு 5mins வெய்ட் பண்ணு, டாய்லட் போய்ட்டு வந்துட்றேன்.
இப்போதான் உங்களுக்கு எல்லாம் அவசரமா வந்து தொலையனுமா?
அதான் நீயே அவசரம்னு சொல்லிட்டியே, வந்தா போய்தான ஆகனும்:)
போலாமா?
ம், பொரு ஹெல்மெட்ட எடுத்துக்குறேன், உயிர காப்பாத்திக்கிறத விட இந்த டிராபிக் போலிஸ்டருந்து பர்ஸ காப்பாத்திக்கிறதுதான் பெரும்பாடா இருக்கு!
ஓகே, லஞ்ச் எதாது வாங்கி சாப்ட்டுக்கோங்க, பாத்துக்கோங்க, bye.
Bye,
நல்ல தூக்கம், இப்டி கெடுத்துவுட்டாளே... இந்த முட்டுசந்துவுள்ள பைக்கயே திருப்பி நிப்பாட்டமுடில, அப்புறம் எங்கிருந்து டெம்ப்போவ (Cab) திருப்புறது!
சாவிய எங்க வச்சேன்? பாக்கெட்லதான வச்சேன், ம், தோ, இருக்கு, ஆமா, என்ன வீட்டுக்குள்ளருந்து எதோ சத்தம் வருது?
போனவாரம்வேற எதோ திருட்டுப்பய இங்க சுத்துனதா சொன்னாங்க!
கீ ஹோல் வழியா பார்க்க நினைக்கையில்,
(சாவி துவாரம் வழியாக பார்த்தால் ஹாலுக்கும் டாய்லெட்டுக்கும் இடையிலான அறை என்று சொல்லுமளவிற்கான ஓர் நடைபாதையை ஒத்த அறை மட்டுமே தெரியும், வாஷிங்மெஷின் வைப்பதற்கான இடம் அது, உள்ளே ஓர் அமானுஷ்ய அமைதி, அதை கலைக்கும் வகையில் திடீரென இரண்டு பெண்குரல்கள் கேட்டது, எந்தவொரு உலகப்படத்திலும் நான் அந்த மொழியைக் கேட்டதில்லை, அவர்களின் பாஷை அவ்வளவு புதிராய், புதிதாய் இருந்தது! படபடப்பு என் உடல்நெடுகிலும் பரவியது,
அங்கே இரண்டு பெண்கள் மிக அழகிய உடைகளணிந்து (ஸ்கர்ட் என்று நினைக்கிறேன்) சுவாரஸியமாக பேசிக்கொண்டிருந்தனர், மிக நேர்த்தியான உடலமைப்பு, இடுப்புவரை நீண்ட பளபளக்கும் straightening செய்த கூந்தல்கள், சாவித்துவாரமேயாகையினால், முகங்களை (மற்ற அங்கங்களையும்தான்) பார்க்க முடியாவிடினும் அவர்களின் பின்புற அழகும் தலைமுடியும் அவர்கள் அழகிகளென படம்பிடித்து காட்டின! ஆர்வம் தொத்திக்கொண்டதால் திருடர்களாக இருப்பார்கள் என்ற எண்ணம்போய் இந்தப் பெண்கள் எப்படி இருப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கியது:) (நானும் சராசரி ஆண்தானே) அவர்களின் முகம் சரியாக தெரியாததால் கதவை தட்டி யாரென்று பார்த்துவிடலாம் என்று எழுந்தேன்! பின்னர்தான் பொறிதட்டியது, பூட்டிய வீட்டிற்குள் இவர்கள் எப்படி வந்தார்கள், திருட வந்தவர்களானால் ஏன் நிதானமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க வேண்டும்? கேள்விகள் என்னைத்துளைக்க கதவருகே காதை வைத்து அவர்கள் பேச்சைக்கேட்க நினைத்தேன், மீண்டும் ஓர் அமானுஷ்ய அமைதி, மீண்டும் சாவி துவாரத்திற்குச் சென்றேன். துவாரத்தின் இடுக்கில் பார்வையை செருகி உற்றுநோக்கினேன், துவாரத்தின் மறுமுனையில் கரும்பச்சை நிறத்தில் ஓர் கண் என்னை உற்று நோக்கியது! விண்வெளியிலிருந்து பாராசூட் இல்லாமல் பூமியில் விழுந்ததாய் மனதில் ஓர் அதிர்ச்சி)
Clap along if u feel like a room without roof... Clap along if u feel like happiness is the truth...
Wife calling....
ச்சீய்ய், இது எல்லாம் கனவா?!?
ஆமா, நேத்து நைட்டே அவங்கம்மா வீட்லல விட்டுட்டு வந்தேன்,
இவ போங்க வாங்கனு மரியாதையா பேசுனப்பவே உறச்சிருக்கனும் இது கனவுனு, இப்புடி பயந்துட்டமே பேயிகீயினு,
ஹலோ, சொல்லுமா,
போன எடுக்க ஏன் இவ்ளோ நேரம்?
எங்க போய்த்தொலஞ்ச hubby?
தூங்கிட்மிருந்தேம்ப்பா,
சரிசரி, எதாவது வாங்கி சாப்டுங்க, சாய்ங்காலம் நானே வந்துட்றேன், நீ எங்கயும் போகாம வீட்ல இரு.
ஓகேமா.
இந்தக் கருமம்புடிச்ச ஒன்னுக்கு எப்போப்பாத்தாலும் அவசரமாத்தான் வரும் ச்சேய்ய்.
வீட்டின் அவர்கள் உட்கார்ந்திருந்த அதே நடைபாதை அறையைத் தாண்டிதான் கழிப்பறை!
(மனதில் லேசாக, இல்லை, வலுவாகவே ஓர் கலக்கம், பயத்தில் பகலும் சற்று இருட்டாகவே இருந்தது! அறையை நெருங்குகையில் வாஷிங்மெஷினுக்கு அடுத்தாற்போல் இரு தலைகள் தெரிய, என் தலைக்குள் மூன்றாம் உலகப்போர் தொடங்கியது, அதே அழகிய ஆடைகள், பளபளக்கும் தலைமுடி?!? யாரென்று அலறினேன், என்னை நோக்கி திரும்பினார்கள்!
ஐஸ் பாக்ஸில் மாதக்கணக்கில் வைக்கப்பட்ட பிணங்களையொத்த வெளிரிய முகங்கள், சற்று நேர்த்தியான புருவங்கள், கூரான நாசியுன், அஷ்டகோணலான பற்களில் ஓர் பழிவாங்கும் சிரிப்பு!
மனதில் பயம் நெருப்பில் பட்ட பஞ்சாய் பற்றிக்கொண்டது, முதுகுத்தண்டில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தாக்கியது, படபடப்பில் தலைசுற்றியது!
பயத்தில் யார் நீங்க என்று நான் அலற, ஒருவத்தி இன்னும் சத்தமாக சிரிக்க ஒருத்தி மட்டும் பதிலளித்தாள்,
இப்போதான கனவுல பாத்த, அதுக்குள்ள மறந்திட்டியா?
அதீத பயத்தில் எல்லோருக்குள்ளும் ஓர் ஆக்ரோஷம் வரும், அதே ஆக்ரோஷத்தில் நான் அவர்களை நோக்கி ஏறிட சட்டென மறைந்துவிட்டனர்.
த்தா ஆளவிடுங்கடி சாமி, sorry பேயினு மனசுல நெனச்சுக்கிட்டு, அவசர அவசரமா ட்ரெஸ்ஸ மாட்டிட்டு, வீட்லருந்து வெளியே ஓடி வந்து வண்டிய ஸ்டார்பண்ணா ஸ்டார்ட் ஆகல!
வீட்டு சாவிய எடுத்து பூட்டத்தெரிஞ்சுச்சே வண்டி சாவிய எடுக்கனும்னு அறிவில்லையானு என் மனசாட்சி என்ன அசிங்கமா திட்டுச்சு,
சரி அதான் கத்துனோன மறைஞ்சுட்டாளுங்களே, திருப்பி வரமாட்டங்கனு தைரியத்த வரவழைச்சிட்டு சாவிய எடுத்துடலாம்னு போனேன்,
எதுக்கும் ஒருதடவ கதவின் சாவிதுவாரத்துல பாத்தா என்னனு தோனுச்சு,
துவாரத்தின் இடுக்கில் பார்வையை செருகி உற்றுநோக்கினால், துவாரத்தின் மறுமுனையில் கரும்பச்சை நிறத்தில் ஓர் கண் என்னை உற்று நோக்கியது!!!